BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, July 26, 2008

என்னை கடந்ததொரு மேகம்


இலக்கின்றி இயங்குகின்ற இயற்கையாய் நானிருந்தேன்
கவலைகள் சுமக்காத காற்றாக நான் திரிந்தேன்
பயமின்றி மழை போல பள்ளத்துள் விழுந்தவன் நான்
வரம்பின்றி வனம் போல கண்டபடி வளர்ந்தவன் நான்

பள்ளிக்கு சாலையிலே நான் நடந்து செல்கையிலே
பட்டாம் பூச்சி கூட்டம் ஒன்று படபடத்து வந்ததடி
பட்டாம் பூச்சி கூட்டத்துள் வண்ணத்துப் பூச்சியொன்று
எனை ஈர்த்து சென்றதடி என் புருவம் உயர்ந்ததடி

நான் ரசித்த பெண்ணழகு எனை பார்த்த பொன் பொழுதில்
சுகமாய் இருந்ததென்ன என் இதயம் கரைந்ததென்ன
பார்வைப் பூ உதிர்த்துவிட்டு பூமரமே நீ கடந்தாய்
வெள்ளைத் தாள் இதயத்தில் ஓவியமே நீ படிந்தாய்

புகைப் பிடித்தால் சில நிமிடம் உற்சாகம் கிடைக்கும் என்பார்
மது குடித்தால் சிலமணிகள் சிந்தைக்குள் கிறக்கம் என்பார்
கண்மணியே உன் கருவிழிகள் என்பக்கம் திரும்பிவிட்டால்
மறுபடி நீ பார்க்கும் வரை மதுவேதும் தேவையில்லை

உன் பார்வை குளிரென்றால் கூவுகின்ற குயிலானேன்
உன் பார்வை வெயிலென்றால் மலர்கின்ற பூவானேன்
உன் பார்வை மழையென்றால் விளைகின்ற பயிரானேன்
உன் பார்வை தீயென்றால் எரிகின்ற திரியானேன்

கண்டபடி திரிந்தவனை உன் கண்ணசைவு கட்டி வைக்க
பள்ளிக்கு விடுப்பெடுக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன்
உன் பார்வை மழை என்மேலே விழக்கோரி தவம் கிடந்தேன்
சில நாள் நீ வரவில்லை உன் பார்வை வரம் தரவில்லை

நீ வாராத நாட்களில் நானாக நானில்லை
முன்போல இருப்பதற்கு என்னால் இயலவில்லை
கண்மூடி இதயத்துள் நான் பார்க்க முயலுகையில்
நேற்றைய உன் பார்வையெல்லாம் கவிதையாய் இருந்ததடி

உன் பார்வையின் சுகமென்ன எனக்கு புரிந்தது
இது தான் காதல் என் இதயம் சொன்னது
உனைப் பற்றி அறிந்ததெல்லாம் உன் பார்வை மட்டுந்தான்
தேவதையே உன் முகமும் உடலமைப்பும் மட்டுந்தான்

உனக்காக ஒரு குணத்தை நானாக உருகொடுத்தேன்
நீ பேசும் பேச்சை இதுவென்று முடிவேடுத்தேன்
ஓராயிரம் முறை உன்னை கண்களுக்குள் மணமுடித்தேன்
காதலனாய் கணவனாய் கண்களுக்குள் அடியெடுத்தேன்

வெறும் காற்றாய் இருந்தவனை இசையாக மாற்றிவிட்டாய்
பெரும்காடாய் இருந்தவனை பூங்கா ஆக்கிவிட்டாய்
எனக்குள் கவிதைகளை உன் பார்வையால் எழுதிவைத்தாய்
எனக்குள் தீபங்களை உன் கண்களால் ஏற்றி வைத்தாய்

உன்னை நான் பின் தொடர்ந்தேன் என் காதலை வெளிப்படுத்த
என் நோக்கத்தை புரிந்து கொண்டாய் முகமெல்லாம் கடுகடுக்க
என் காதலின் பிரசவத்தில் அதன் பார்வைத் தாய் இறந்தே போனாள்
நான் வரும் நேரமெல்லாம் மண்ணை பார்த்தவள் எனை மறந்தே போனாள்

உன் கண்ணோர பார்வையின்றி குருடனாய் நானானேன்
தாரகையே நீ எனைக் காண தவசியாய் நானானேன்
நீ எனைப் பார்த்து சில நாட்கள் கடந்தோடி விட்டதனால்
தேவதையே நெஞ்சுக்குள் ரகசியமாய் அழுதுவிட்டேன்

உன் மலர்விழிகள் நிலம் பார்க்க முகமெல்லாம் கடுகடுக்க
என்னை நீ கடந்து சென்றாய் எனைப் பார்க்க மறுத்துவிட்டாய்
உள் நெஞ்சில் துக்கத்துடன் முகமெல்லாம் ஏக்கத்துடன்
உன் திசை நோக்கி நின்றிருந்தேன் நீ செல்லும் வரை பார்த்திருந்தேன்....

Monday, July 21, 2008


உன்
காயங்களுக்கு
மருந்தளிக்கவே
காத்திருக்கும்...
என் கைகள்...!

நீ
மருந்தளிக்கவே
காத்திருக்கும்
என் காயங்கள்...!

Friday, July 18, 2008

உன் வார்த்தைகளில்
தொலைந்த மௌனமோ...

நீ பார்த்ததில்
கரைந்த காட்சியோ...

உன் மென்மையில்
உடைந்த பலமோ...

அல்லது
நீ மறுத்ததில்
கிடைத்த புதையலோ...

உனக்காக கிடக்கிறது
எந்தன் நெஞ்சில்!


உனக்கு தெரியாமல்
எனக்கே தெரியாமல்
பாதைகள் கூட இல்லாமல்
உன்னை நோக்கி
நான் பயணித்த வேகம்
தெரியுமா உனக்கு?